Wednesday, 29 April 2015

சாத்தியமாகாத ஒரு நாடு இரு தேசம் கொள்கை- முஸ்லீம்களை புறந்தள்ளி தீர்வு சாத்தியமில்லை




இலங்கையில் பொதுதேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில் இத்தேர்தலை இலக்கு வைத்து மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன.

தமிழீழமே தமது இறுதி இலக்கு என்று புலம்பெயர்நாடுகளில் செயற்படும் இந்த அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலில் கீழ் ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையுடன் செயற்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ( அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்) வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

அதன் ஒரு அங்கமாக மாற்றத்திற்கான குரல் என்ற பெயரில் ஏற்கனவே கனடாவில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் திகதி லண்டனில் இந்த அமைப்பினர் கருத்தரங்கு ஒன்றை நடத்தினர்.
கடந்த 2010ஆம் ஆண்டு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் வெற்றிக்காக பல்வேறு வழிகளில் போராடி தோற்றுப்போனமை சகலரும் அறிந்த விடயம்.

தற்போது பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் இவ்வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் மாற்றத்திற்கான குரல் என்ற பெயரில் மேற்குலக நாடுகளில் மக்கள் ஆதரவையும் பணத்தையும் திரட்டும் நோக்குடன் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படும் அறவிழி அரசியல் போக்குகளும் நோக்கங்களும் தடம்மாறி செல்வதாகவும் தமிழ் அரசியல் தலைமையை தமிழர் நலன்சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை எதிர்வரும் தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றி ஈட்ட செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்களுக்கான ஒரே தீர்வு தமிழீழம் தான் என கூறிவரும் விடுதலைப்புலி அமைப்பினர் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பை வெற்றி பெற செய்ய வேண்டும் என முற்படுவதன் மூலம் தமது இலக்கை எவ்வாறு அடையப்போகிறார்கள் என்பதை அவர்கள் இந்த கருத்தரங்குகளில் விளக்கவில்லை.
தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற இலக்குடன் இரு தேசம் ஒரு நாடு என்பதே தமது கொள்கை என்றும் அதனை அடைவதே தமது நோக்கம் என்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியக் மக்கள் முன்னணியினர் கூறிவருகின்றனர்.

இலங்கையில் இரு தேசங்கள் இருப்பதாகவும் ஒன்று தமிழர் தேசம் மற்றது சிங்கள தேசம் என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்வைக்கும் வாதமாகும்.
யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணமும் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணமும் தமிழர் தேசமாக அடையாளப்படுத்தப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்து அதனை தமிழர் தேசமாக பிரகடனம் செய்து அப்பிரதேசத்தில் தனியான ஆட்சி ஒன்றை அமைப்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் கொள்கையாகும். 
ஒரு நாடு இரு தேசம் என்ற கஜேந்திரகுமாரின் கோரிக்கையில் படி தமிழர் தேசம் என்ற எல்லைக்குள் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக்கூடிய ஒரு வீத சாத்தியமாவது உள்ளதா? கிழக்கில் உள்ள 60வீதமாக இருக்கும் முஸ்லீம் சிங்கள மக்கள் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைவதற்கு சம்மதிப்பார்களா? அதை விட கிழக்கில் உள்ள தமிழர்கள் வடக்குடன் இணைவதற்கு சம்மதிப்பார்களா? கிழக்கில் முஸ்லீம்களை விட்டு தீர்வு சாத்தியமா? கிழக்கில் உள்ள ஒரு முஸ்லீமாவது இவர்களின் தமிழர் தேசம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் தேசம் என்பதை விட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆட்சியாவது சாத்தியமா என்ற யதார்த்தத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் முதலில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய குடிசன பரம்பலை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்களும் சரி அல்லது அவர்களுக்கு சார்பாக இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி கிழக்கு மாகாணம் பற்றிய சரியான புரிதல் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் ஒரு தனிஇனமாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கிலும் அவர்கள் ஒரு தனி இனமாகவே வாழ்ந்து வருகிறார்கள். எனவே கிழக்கு மாகாணம் தனியே ஒரு தமிழ் இனத்தை கொண்ட மாகாணம் அல்ல, அது தமிழ் முஸ்லீம், சிங்கள இனங்களை உள்ளடக்கிய மூன்று இனங்களை கொண்ட மாகாணமாகும். அவ்வாறானால் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தனி தமிழர் பிரதேசம் என்று எப்படி சொல்ல முடியும்?
தமிழர் பிரதேசத்தில் உள்ள முஸ்லீம்களதும் சிங்களவர்களதும் நிலை என்ன?

வடக்கு கிழக்கு இணைப்பு கூட தற்போது சாத்தியமற்ற ஒன்று என்பதை அங்கு இனரீதியான குடிமக்களின் எண்ணிக்கையையும் வீதத்தையும் அறிந்து கொண்டால் புரிய முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4இலட்சத்து 20ஆயிரத்து 949 தமிழர்களும் ( 73வீதம் ) ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 17 முஸ்லீம்களும் ( 26.5வீதம்) 4992 பறங்கியர்களும், 3306 சிங்களவர்களும் வாழ்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2இலட்சத்து 82ஆயிரத்து 484 முஸ்லீம்களும் (44வீதம்) 2இலட்சத்து 51ஆயிரத்து 18 சிங்களவர்களும் (40வீதம்) ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 750 தமிழர்களும் ( 16வீதம்) வாழ்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 84ஆயிரத்து 529 முஸ்லீம்களும் (41.86வீதம்) ஒரு இலட்சத்து 44ஆயிரத்து 613 தமிழர்களும் (32.80வீதம்) ஒரு இலட்சத்து 10ஆயிரத்து 679 சிங்களவர்களும் ( 25.10வீதம்) வாழ்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 1946ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தமிழர்கள் 41.51வீதமாகவும், முஸ்லீம்கள் 30.58வீதமாகவும் சிங்களவர்கள் 20வீதமாகவும் காணப்பட்டனர். தற்போது முஸ்லீம்கள் 30வீதத்திலிருந்து 40வீதமாக அதிகரித்திருக்கிறார்கள், சிங்களவர்கள் 20வீதத்திலிருந்து 25வீதமாக அதிகரித்திருக்கிறார்கள். தமிழர்கள் 41வீதத்திலிருந்து 32.வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ( 678312) 40வீதமாகவும், முஸ்லீம்கள் (620030) 37.5வீதமாகவும் சிங்களவர்கள் (365003) 22.5வீதமாகவும் உள்ளனர்.

கிழக்கில் 60வீதமாக இருக்கும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர் தேசம் என்ற கொள்கைக்கோ அல்லது வடக்குடன் கிழக்கை இணைப்பதற்கோ ஒரு போதும் இணங்கப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
கஜேந்திரகுமார் போன்றவர்கள் வடக்கை மட்டும் வைத்து சிந்திக்கிறார்களே தவிர கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பற்றி சிந்திக்கவில்லை, முஸ்லீம்கள் மட்டுமல்ல அங்குள்ள தமிழர்களை பற்றி கூட சிந்திக்கவில்லை. கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம்களை விரோதித்து கொண்டு வாழ முடியாது என்பதும் இதனால் இவர்களின் இரு தேசம் என்ற கொள்கை எந்த நிலையிலும் சாத்தியமில்லை என்பதும் தான் யதார்த்தம்

வடக்குடன் கிழக்கு இணைப்பதற்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்களும் சிங்களவர்களும்( 60வீதம்) சம்மதிப்பார்களா? ஒரு உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். வடமாகாண தமிழர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்வதற்கே அங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள். இதனை 24வருடங்களாக கிழக்கில் வாழ்ந்தவன் என்ற வகையில் அனுபவத்திலும் நேரிலும் உணர்ந்திருக்கிறேன்.

1980களின் முன்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம்கள் தமிழர்களுடன் ஐக்கியமாக வாழ்ந்தனர். அரசியலிலும் தமிழர்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தனர். ஆனால் 1980களின் பின்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் மிக தந்திரமாக செயற்பட்டனர். தமிழர்களும் முஸ்லீம்களும் மோதும் நிலைகளை உருவாக்கினர்.
மிக தந்திரமாக ஊர்காவல்படைகளில் முஸ்லீம்களை இணைத்து கொண்டு அவர்களை தமிழ் இயக்கங்களுடன் மோத விட்டதன் மூலம் தமிழ் முஸ்லீம் உறவு விரிசல் அடைந்தது. உச்சக்கட்டமாக விடுதலைப்புலிகள் முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்ட மக்களை சுட்டுக்கொன்றனர். பதிலுக்கு முஸ்லீம்களும் வீரமுனை பிள்ளையார் ஆலயம் உட்பட பல இடங்களில் தமிழர்களை வெட்டிக்கொன்றனர்.

கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவு முறிந்து போவதற்கு விடுதலைப்புலிகளும் காரணமாக இருந்தனர், அரச படையினரும் காரணமாக இருந்தனர், அரச படையினருடன் இணைந்திருந்த முஸ்லீம்களும் காணமாக இருந்தனர்.
இதனால் 1990களின் பின்னர் கிழக்கில் முஸ்லீம்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ விரும்பிய அளவிற்கு தமிழர்களுடன் உறவை வளர்த்து கொள்ளவில்லை, கடந்த மாகாண சபை தேர்தலின் போது கூட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் சிங்கள அரசியல் தலைமைகளுடன் கூட்டை வைத்துக் கொள்ள விரும்பினார்களோ ஒழிய தமிழ் தலைமைகளுடன் கூட்டை வைத்துக் கொள்ள விரும்பவில்லை,
கிழக்கு மாகாண சபையில் தற்போது அமைக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை வழங்கி முறிந்து போன தமிழ் முஸ்லீம் அரசியல் உறவை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒட்ட வைக்க முற்பட்டிருக்கிறது.

விடுதலைப்புலிகளால் முறித்து சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் உறவை சம்பந்தன் தற்போது மீண்டும் கட்டி எழுப்ப முற்பட்டிருப்பது முற்போக்கான விடயமாகும். ஆனாலும் இந்த அரசியல் உறவை வைத்து கொண்டு கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்க சம்மதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் தங்களை தமிழர் என்ற அடையாளத்திற்குள் வர விரும்புவதில்லை, தங்களை ஒரு தேசிய இனமாகவே கருதுகிறார்கள், தமிழர் தேசம் சிங்கள தேசம் என பிரிக்கப்பட்டால் முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் வேண்டும் என அவர்கள் கோரலாம். அப்படி கோரினால் வடகிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்ற கொள்கையின் நிலை என்னாகும்?

தமிழர் தேசம் என்பதை விட்டு விடுவோம், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண ஆட்சி கூட தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும். வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டுமானால் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

கிழக்கில் உள்ள 37.5வீதமான முஸ்லீம்களும் 22.5வீதமான சிங்களவர்களுமாக மொத்தம் 60வீதமானவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். மிகுதி 40வீதமான தமிழர்களிலும் கணிசமானவர்கள் வடக்குடன் கிழக்கு இணைவதை விரும்பவில்லை. வடக்கு தலைமைகளுக்கு எதிரான போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

தமிழர் தேசம் என்ற கோஷம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் உறவை மேலும் சீரழிக்கவும், தமிழர்கள் மீது முஸ்லீம்கள் சந்தேகம் கொண்டு பார்ப்பதற்குமே வழிவகுக்கும்.

சில தமிழர்கள் தமது வசதிக்காக கிழக்கில் உள்ள முஸ்லீம்களை தமிழ் பேசும் மக்கள் என அழைக்கின்றனர். அந்த தமிழ் பேசும் மக்கள் என்ற வட்டத்திற்குள் வருவதற்கு இலங்கையில் உள்ள முஸ்லீம்மக்கள் தயாராக இல்லை, அவர்கள் தங்களை தனியான ஒரு இனமாக இலங்கை முஸ்லீம்கள் என்ற இனவரையறைக்குள் அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர்.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் குறிப்பாக கிழக்கில் உள்ள முஸ்லீம்களின் இந்த உணர்வுகளை தமிழர் தரப்பு சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

கிழக்கில் உள்ள முஸ்லீம்களது அபிலாசைகளையும் விரும்பங்களையும் அரசியல் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளாது அவர்கள் மீது தமிழர் தேசம் என்ற கொள்கையை அல்லது தமிழீழம் என்ற கொள்கையை திணிக்க முடியாது. தமிழர்கள் மேல் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழர் தேசம் சிங்கள தேசம் என கோஷமிடுவது கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை சின்னாபின்னமாக்கி விடும். இது கிழக்கில் உள்ள தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும்.

வெறுமனே வடக்கின் அரசிலை மட்டும் வைத்து சிந்திக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் களயதார்த்தங்களை புரிந்து கொண்டு மீண்டும் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லீம் உறவை வெட்டி சாய்க்காமல் இருந்தாலே போதும்.

இரா.துரைரத்தினம்
Loading...