Tuesday, 28 April 2015

ஜோன் கெரியின் சிறிலங்கா பயணத்தை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

john-kerry-welcome

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் சனிக்கிழமை, மே 02ஆம் நாள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தின் பதில் பேச்சாளரான மேரி ஹாப், ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் மே 02 ஆம் நாள், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

அத்துடன்,  2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமும் இதுவேயாகும்.

கொழும்பில், தங்கியிருக்கும் போது, அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மற்றும் ஏனைய சமூகங்களினது பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ள ஜோன் கெரி, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதுடன், சிறிலங்காவின் அமைதியான, உறுதியான, செழிப்பான எதிர்காலத்துக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்துவார்.

அத்துடன், பௌத்தர்களின் வெசாக் விடுமுறைக் கொண்டாட்டங்களிலும், ஜோன் கெரி இணைந்து கொள்வார்.

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு மே 03 ஆம் நாள் கென்யாவுக்குச் செல்லும், அமெரிக்க இராஜாங்கச் செயலர், அங்கிருந்து மே 05 ஆம் நாள், டிஜிபோட்டிக்குச் செல்லவுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...