Saturday, 30 May 2015

"430000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் மனிதரை கொன்ற சான்று"

ஆதிமனிதனின் "கொலை"த்தாக்குதலுக்கான சான்று
உயிர்ச்சேதம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தாக்கிய மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக மானுடவியலாளர்கள் நம்புகின்றனர்.
ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு லட்சத்தி முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரது மண்டை ஓடு என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த மண்டையோட்டில் இரண்டு எலும்பு முறிவுகள் காணப்பட்டதாகவும், அதற்கான காரணம், ஒரே பொருளால் அது பலமுறை தாக்கப்பட்டிருந்தது தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிலாஸ் ஒன்’ என்ற அமெரிக்க விஞ்ஞான சஞ்சிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
குறைந்தபட்சம் 28 மனித எலும்புக்கூடுகள் இந்த குகையில் கண்டெடுக்கப்பட்டன. அவையெல்லாமே அங்கே வசித்த ஆதிமனிதர்கள் தங்களில் இறந்தவர்களின் சடலங்களை இங்கே இந்த குகையில் கொண்டுவந்து போடும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இறந்தபிறகு மனித சடலங்களை கொண்டுவந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசும் அல்லது புதைக்கும் "இறுதிக்கிரியைகள்" செய்யும் பழக்கம் ஆதிமனிதர்களிடம் தோன்றிய துவக்ககால சான்றாக இந்த குகை பார்க்கப்படுகிறது.


Thanks BBC Tamil
Loading...