
- எஸ். முத்துமீரான்
இளந்தென்றலில் இரவும் பகலும்
இனிமையான வாழ்வையும்,
இயற்கையின் இன்பங்களையும்
இதமான சுகங்களையும் அள்ளித்தந்த
எங்கள் தாய்மண் அழிந்து கிடக்கிறது.
பொலிவிழந்து அநாதையாய் கிடக்கும் மண்ணை
அரக்கர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி
அழகையும் ஆளுமையும் அளித்து, எங்களை
எங்கள் மண்ணில் சுதந்திரமாக வாழவிடு

கொடிய அரக்கர்களின் கொடுமையினால்
கோலமழிந்து வேதனையில் விம்மும்
என்தாய் மண்ணில், மறைந்த வசந்தத்தை
மீண்டும் தந்து மகிழ்ச்சியத் தா..
கூவமுடியாமல் குரலிழந்து சோலைக்குள்,
குற்றுயிராய்க் கிடக்கும் குயில்களுக்கு,
குரலினிமையைக் கொடுத்து விடு,
இளவேனிற்கால சுகத்தையும், இன்பத்தையும்
என் மண்ணில் மலரச் செய்து,
இனவெறி பிடித்த அரக்கர்களையும்,
மதவெறி பிடித்த மனிதமில்லாப் பாவிகளையும்
அடித்து துரத்தி, என்தாய் மண்ணில்
மனிதநேயத்தை உயிர்ப்பித்துவிடு!
- எஸ். முத்துமீரான்
