Monday, 18 May 2015

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீர் ராஜினாமா: ஜெயலலிதாவுக்காகவா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா

தமிழக தலைநகர் சென்னையின் ஆர்.கே.நகர்ப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல், இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மே.17,2015 தேதியிட்ட வெற்றிவேலின் ராஜினாமாவை இன்றே ஏற்றுக்கொண்டதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் ஐ பி தனபால் அறிவித்திருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமிழக அரசிதழில் இன்றே வெளியிடப்பட்டிருக்கிறது.

வருமானத்தைமீறி சொத்துக்குவித்தார் என்கிற ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தமிழக முதல்வர் பதவியை இழந்த அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா தனது தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அவரது மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், அவரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து கடந்தவாரம் தீர்ப்பளித்திருந்தது. எனவே அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்பதில் சட்டத்தடை எதுவும் இல்லை என்பதால் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மே மாதம் 22ஆம் தேதி கூட்டப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அன்றோ அல்லது மறுநாளோ அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வெற்றிவேல் திடீரென பதவி விலகியிருக்கிறார். தனது திடீர் பதவி விலகலுக்கான காரணங்கள் என்ன என்பதை வெற்றிவேல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் வெற்றிவேலின் பதவி விலகலைத் தொடர்ந்து ஆர் கே நகர்த் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இல்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்கும் நிலையில், அப்படிப் பதவியேற்ற ஆறுமாத காலத்துக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது விதி. எனவே சென்னை ஆர் கே நகர்த் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு சரியா தவறா என்பதை இன்று பதவி விலகியிருக்கும் வெற்றிவேல் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தவில்லை.
Loading...