Wednesday, 20 May 2015

பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இணையத்தளமே

Image result for MODI AND INTERNET IMAGE
வாஷிங்டன்: மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட முறையில் தன்னை ஒரு  தொழில்நுட்பத் தலைவராக சிறப்பாக பிரதிபலித்துக் கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்தும் உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் நரேந்திர மோடி.  தேர்தல் பிரசாரத்தின்போதும், பிரதமரானப் பிறகும், நவீன தொழில்நுட்ப வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார் மோடி என்று அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு குறித்து அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் தகவல் பள்ளியின் உதவிப் பேராசிரியரான ஜோயோஜீத் பால் கூறியதாவது: உலக அளவில்  அதிக அளவில் பின்தொடரும் உலகத் தலைவர் பட்டியலில் 5.9 கோடி பேருடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். 1.23 கோடி பேருடன் நரேந்திர  மோடி இரண்டாம் இடத்தில் உள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போதும், அதைத் தொடர்ந்து தற்போதும் ட்விட்டர், பேஸ்புக் என்று பல்வேறு சமூக  வலைதளங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார். பிரசாரத்தின்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வந்த மோடி, பிரதமரானதும் அதிலும்  மாற்றம் செய்தார். 

ஓபாமாவின் ட்விட்டர் செய்திகள், அவருடைய நிகழ்ச்சி நிரல்கள், செயல் திட்டங்கள் என இருக்கும். அதை பார்க்கும்போதே, அவருடைய சார்பில் ஒரு குழுதான் இந்த  செய்திகளை வௌியிடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் அதிலும் மோடி புதுமையை புகுத்தினார். அவருடைய பெயரில் வரும் செய்திகள்  அனைத்தும் அவரே எழுதியது போல் இருக்கும். அதிலும் அரசியல் அதிகம் கலக்காமல், பொது மக்களுடன் நேருக்கு நேர் பேசுவதைப் போல் இருக்கும். 

விழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது, விபத்துகளின்போது இரங்கல் தெரிவிப்பது, வெளிநாட்டு தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று ஒவ்வொருவரையும்  நேரடியாக விசாரிப்பதுபோல் அவருடைய செய்திகள் உள்ளது. இதுவே அவருடைய வெற்றியாகும். இந்திய அளவில் மோடிக்கு அடுத்தபடியாக ட்விட்டரில் அதிகம்  பின்தொடரும் அரசியல் தலைவர் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். அவரை 30 லட்சம் பேர் தொடர்கின்றனர். 

அரசியல் விமர்சனம், தன்னுடைய சொந்தக் குறிப்பு ஆகியவே சசிதரூரின் செய்தியில் இருக்கும். ஆனால் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, அனைத்து தரப்பினரையும்  கவரும் வகையில் செய்தி வெளியிடுவதுடன், தன்னை ஒரு தொழில்நுட்பத் தலைவராகவும் நிரூபித்து வருவதில் மோடி வெற்றி கண்டுள்ளார். இவ்வாறு ஜோயோஜீத்  பால் கூறினார்.

தெரியுமா?

* உலக அளவில் ட்விட்டரில் மிக அதிகமானோர் பின் தொடருவது, பாடகர்கள் கேட்டி பெர்ரி (6.90 கோடி பேர்), ஜஸ்டின் பேபர் (6.3 கோடி பேர்).

* அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 5.9 கோடி பேருடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

* நடிகை கிம் கர்தாசியன் 1.42 கோடி பேருடன் பட்டியலில் 65வது இடத்தில் உள்ளார். மோடி 85வது இடத்தில் உள்ளார்.

* இந்தியாவில் நடிகர்களே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மோடி 4வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அமிதாப் பச்சன் (1.47 கோடி), ஷாருக்கான் (1.30 கோடி),  ஆமிர்கான் (1.26 கோடி) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

* இந்தியாவில் 28 கோடி பேர் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளனர். ஆனால் மக்கள்தொகையில் இது நான்கில் ஒரு பங்கே. ஆனால் அதிகபட்சம் 3 கோடி பேர்  மட்டுமே ட்விட்டரில் இணைந்துள்ளனர்.

* உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ட்விட்டருக்கு இணையாக வெய்போ  உள்ளது. அதனால்தான் ட்விட்டரில் சீன அதிபர் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. இந்த வெய்போவிலும் மோடி இணைந்துள்ளார்.
Loading...