Friday, 29 May 2015

கவிதை :உதிரம் சிந்தும் உறவுகள்


இரும்பு இதயத்தையும் 
இறுக்கிப் பிழியும் ஈனக் குரல்கள்
ஈமானிய நெஞ்சங்களின் செவிகளை
இன்னும் எட்டவில்லையா?

வெள்ளாட்டு மந்தைகளை
குள்ளநரிக்  கூட்டம்  குதறுவது 
கூடியிருக்கும் நாடுகளின் கண்களுக்கு  
தெரியவில்லையா?

கட்டோடிருந்த கரும்பினை 
கட்டெறும்புக் கூட்டமாய் மொய்த்து
உதிரம் குடித்து, உடல்களை 
குப்பையாய் கூட்டி அள்ளி 
வேகும் தீயில்  வீசி  எறிவதை 
நம்மவர் கண்கள்  இன்னும்  காணவில்லையா

மாட்டுக்காயத்   தீக்குளிக்கும் மறவர்கள் 
மனிதரிடம்  மனிதம்  அற்ற மாயவர்கள் 
செத்த  பாம்பினை அடித்து 
வீரத்தை நிலைநாட்ட  நினைக்கும் வீம்பர்கள்

புத்ததர்மம் போதிக்கும் பிக்குகளா இல்லை 
புற்றில் வளர்ந்து துரத்திக் கொத்தும்  
நச்சுப் பாம்புகளா

ஒழித்து விடவும் , மறைத்து வைக்கவும்
எம்மவர் என்ன கூண்டுக்  கிளிகளா

மண்ணில் விழுந்தாலும் வெடித்து
துளிர்விட்டு மரமாய் வளர்ந்து 
நிழல்கொடுக்க நினைக்கும்  வீரிய விதைகள்

எம் ஒலிகள் ஒன்று சேரும்போது நீங்கள் 
ஒளிந்து கொள்ளும் காலம்  தூரமில்லை

ஈரமுள்ள நெஞ்சர்களே 
பாவம்  அந்த படகையாவது  காப்பாற்றுங்கள் 
அவர்கள் கண்ணீரால்  நிரம்பி  அதுவும் 
கவிழ்ந்து விடப் போகிறது


Displaying FB_IMG_1432915127998.jpg
முஹமட் இப்ராஹீம் ஷபீனா
ஓட்டமாவடி
Loading...