துபாய்: சர்வதேச அளவில் தலைசிறந்த ஹோட்டலாக துபாயின் புர்ஜ் அல் அரப் ஹோட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 'டெய்லி டெலிகிராப்' நாளிதழ் வாசகர்கள் மத்தியில் 20 அளவுகோல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்றது. லண்டனில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருது ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.
650 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் 1999ல் திறக்கப்பட்டது.இந்த ஆடம்பர ஹோட்டல் (luxury hotel). 322 மீட்டர் (1056 அடி) உயரமுள்ள கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இந்த ஹோட்டலை நிலப்பகுதியுடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.
உலகின் மிகவும் சிறந்த சொகுசு ஹோட்டல் என்ற கவுரவத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்கவைத்துள்ள புர்ஜ் அல் அரப் ஹோட்டல், மத்திய கிழக்கு நாடுகளில் மிக சிறந்த ஓட்டல் என்ற இடத்தையும் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் உலகின் ஒரே ஏழு நட்சத்திர ஓட்டல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இரவு தங்குவதற்கு குறைந்த பட்ச வாடகை ரூ.1 லட்சத்திற்கு மேலாகும். சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஹோட்டலில் அமைந்துள்ள ஹெலிபேடில் டென்னிஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு உலகின் உயரமான இடத்தில் நடத்தப்பட்ட டென்னிஸ் போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.