மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வகம் சென்ற ரஷியா விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. அது நாளை பூமியில் விழுகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமியில் இருந்து 420 கி.மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் உருவாக்குகின்றனர். அங்கு தங்கி பணிபுரியும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், உடை, எரிபொருள், ஆக்சிஜன், மற்றும் உபகரணங்கள் ரஷியாவின் ''திபுரோகிரவ் எம்.27 எம்'' என்ற ஆளில்லா விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 28–ந்தேதி கஜகஸ்தானில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தரைகட்டுப்பாட்டு நிலையத்துடன் ஆன தகவல் தொடர்பை இழந்து விட்டது. எனவே, அந்த விண்கலம் செயல்பாடு இழந்து எரிந்து விட்டதாக விண்வெளி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த விண்கலத்தின் சிறிய அளவிலான இடிபாடுகள் மட்டும் பூமியில் வந்து விழும் என தெரிகிறது. அது கிழக்கு அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் அல்லது இந்தோனேசியா கடலில் விழும் என ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அது பூமியில் நிலப்பரப்பில் விழாது என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே புரோகிரஸ் விண்கலம் செயல்பாடு இழந்தது குறித்து சிறப்பு கமிஷன் விசாரணைக்கு ரஷியா உத்தரவிட்டுள்ளது. தற்போது விண்கலம் எரிந்ததின் மூலம் ரூ.330 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
