Saturday, 2 May 2015

இலங்கை தமிழ் அகதிகள் அனைவருக்கும் பயோமெட்ரிக் கார்டுகள் வழங்கப்படும்: அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஆனந்த்


இலங்கை தமிழ் அகதிகள் அனைவருக்கும் உதவித் தொகையை வங்கிகளில் பெறும் வகையில் பயோமெட்ரி்க்கார்டுகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஓ.பி.ஆனந்த் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்த்தில் ஆனைக்குட்டம் இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் தொடர்பாக முதன்மைச் செயலாளர், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழக நல ஆணையாளர் ஓ.பி.ஆனந்த் அதிகாரிகளுடன் நேரில் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதோடு, அங்குள்ள தமிழ் அகதிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.இது தொடர்பாக அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வளாகம், குடியிருப்புகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கண்டியாபுரம்-1046 பேரும், அனுப்பங்குளம்-85, செவலூர்-244, குல்லூர்சந்தை-981, மல்லாங்கிணறு-133, ஆனைக்குட்டம்-389, மொட்டமலை-577 என மொத்தம் 3456 பேர் உள்ளனர். தற்போது, கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் முகாம்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், செவலூர் முகாமில் புதிதாக 25 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இங்கிருந்து தமிழ் அகதிகளை இலங்கை அனுப்புவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாதந்தோறும் இவர்கள் குடும்பத்திற்கான உதவித் தொகை பயோமெட்ரிக் கார்டுகள் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, இதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அகதிகள் முகாம்களில் வசித்து வருகிறவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டமும் நடைபெற்றது. அப்போது, உடன் ஆட்சியர் வே.ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, திட்ட அலுவலர் மா.பிரபாகர், நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, தனி வட்டாட்சியர்(அகதிகள்) பாலசுப்பிரமணியன், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Loading...