Friday, 19 June 2015

ஜேர்மன், இத்தாலி நாடுகளில் உள்ள தனது 11ஆயிரம் துருப்புக்களை விலக்க அமெரிக்கா முடிவு!












ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து 11 ஆயிரம் துருப்புக்களை விலக்கி கொள்ள போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆசியா பிராந்தியத்தில் தனது தந்திரோபாய நகர்வுகளை மேற் கொள்வதற்காக தாம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக  அறிவித்துள்ள அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அணியுடன் தாம் நெருங்கிய பிணைப்பை தொடரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

ஐரோப்பாவில் நிரந்தரமாக வைத்திருக்கும் துருப்புக்களை குறைப்பதன் மூலம் ஐரோப்பிய பங்காளிகளுடனான தொடர்பு குறைந்து விடும் என்று எண்ணக்கூடாது என்று பென்டகன் செயலாளர் ஜோர்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரண்டு இராணுவ பிரிகேட்கள், இரண்டு விமானப்பிரிவுகள் ஆகியன குறைக்கப்படும் துருப்புக்களில் அடங்குகின்றன என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேற்றா ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போது தெரிவித்தார்.


இப்படைக்குறைப்பு நடவடிக்கை நேட்டோ அணியினுடனான வொஷிங்டனின் கடப்பாட்டை குறைக்கமாட்டாது என்றும் கூட்டுச்செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். ஜெர்மனியில் 40 ஆயிரம் அமெரிக்க துருப்புக்கள் தொடர்ந்து இருக்கும் என்று பென்டகன் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க துருப்புக்கள் குறைப்பு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பனிப்போர் காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் ஒரு கட்டத்தில் 270,000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருந்தன.
Loading...