கோலாலம்பூர்: 7.5 மில்லியன் லிட்டர் பெட்ரோலுடன் மலேசிய சரக்கு கப்பல் ஒன்று காணாமல் போனதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்கப்பலில் பயணம் செய்த 22 பணியாளர்களின் நிலை பற்றியும் எவ்வித தகவலும் இல்லை.
எம்.டி. ஒர்கிம் ஹார்மோனி என்ற அக்கப்பல் மலேசியாவின் மலாக்காவிலிருந்து குவாண்டனுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனது. காணாமல் போன கப்பலில் இருந்த பெட்ரோலின் எடை 6000 டன்கள் இருக்கும் என்றும், அதன் மதிப்பு 15 மில்லியன் ரிங்கிட் எனவும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் செயல் இயக்குனர் இப்ராகிம் முகமது கூறியுள்ளார்.
இதில் பணியாற்றி வரும் 22 ஊழியர்களில், 16 பேர் மலேசிய நாட்டை சேர்ந்தவர்களென்றும், 5 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்களென்றும், ஒருவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கப்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் கப்பல் திடீரென்று காணாமல் போனது குறித்து அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் கவலை தெரிவித்துள்ளார்.
