கொழும்பு: இலங்கையில் 3 தமிழ் கட்சிகள் ஒரே அணியாக இணைய முடிவு செய்துள்ளன. இலங்கையில் பிரதான தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர மேற்கு மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி, தேயிலை தோட்டத் தமிழ் தொழிலாளர்களுக்காக தேசிய தொழிலாளர் யூனியன், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இதில், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் யூனியன், மலையக மக்கள் முன்னணி கட்சிகள் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி தலைவர் மனோ கணேசன் நேற்று அளித்த பேட்டியில், ‘தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் வாழவில்லை. மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென்மேற்கு மாகாணங்களிலும் வாழ்கின்றனர். மொத்தமுள்ள 32 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு, கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியில் தான் வசிக்கின்றனர். அவர்களின் நலனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியால் போராட முடியாது. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்காக நாங்கள் 3 கட்சிகளும் ஒரே அணியில் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
தேசிய தொழிலாளர் யூனியன், மலையக மக்கள் முன்னணி கட்சிகள் அதிபர் தேர்தலின் போது, சிறிசேனவுக்கு ஆதரவு அளித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கூட்டணி அடுத்து நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
