Tuesday, 9 June 2015

ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெர்மனியில் போராட்டம்

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்புத் 
G7தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கார்மிஷ்-பார்டென்கிர்ச்சன் நகரில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீஸார் கலைக்க முயன்றபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காயமடைந்தனர். உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  அப்போது, அவர்களில் சிலர் பாட்டில்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏழு நாடுகளின் தலைவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலை நோக்கி, போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றபோது, போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர்.  ஆனால், ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள தலைவர்கள் ஜெர்மனியைவிட்டு வெளியேறும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.  ""பருவநிலை மாற்றம், நியாயமான வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள வறுமையைக் குறைத்தல் போன்றவற்றில் உலகின் பணக்கார நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 6), திங்கள்கிழமையும் (ஜூன் 7) நடைபெற உள்ள இந்த மாநாட்டில் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகிய 7 நாட்டுத் தலைவர்களும், நிதி அமைச்சர்களும் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கின்றனர்.  மாநாடு நடைபெற உள்ள இடத்தைச் சுற்றி 16 கி.மீ. அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  8 நாடுகள் பங்கேற்று வந்த இந்த மாநாட்டில் ரஷியா விலகியதை அடுத்து தற்போது 7 நாடுகள் பங்கேற்கின்றன.
Loading...