பாகிஸ்தானின் பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களில் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
மலாலா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். தீவிரவாதிகளின் கொலை முயற்சியில், மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை சுட்டுக்கொல்ல முயன்ற வழக்கில் தலிபான் தீவிரவாதிகள் ஜாபர் இக்பால், பிலால், ஷவுக்கத், சல்மான், இஸ்ரருல்லா, ஜாபர் அலி, இர்பான், இசார், அத்னன், இக்ரம் ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஸ்வாட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 10 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கருதிய நீதிமன்றம், அனைவருக்கும் 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
ஆனால் மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதிகளை சிறையில் அடைத்த சிலநாட்களிலேயே பாகிஸ்தான் அரசு ரகசியமாக 8 பேரை வெளியே விட்டுள்ளது.அவர்களில் இஸ்ரருல்லா, இசார் உர் ரகுமான் ஆகிய இரண்டு பேர் மட்டும் சிறையிலே உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மலாலாவை சுட்டடவர்களை நீதியின் முன்பு நிறுத்துங்கள் என பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ''மலாலா சுடப்பட்ட சம்பவத்திற்கு காரணமாவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதேபோல், இந்த வழக்கு குறித்து முழு விபரங்களையும் பெறுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். இது தொடர்பாக முழு விபரம் கிடைத்தவுடன், முழுத்தகவலும் வெளியிடப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
