பிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் காதலி மரிடா லோரென்ஸ் என்பவரையும் தன் வலையில் விழவைத்தது அமெரிக்க உளவுத்துறை. குளிர்காலத்துக்கான க்ரீமை உடலில் தடவிக் கொள்வது காஸ்ட்ரோவின் வழக்கம். அதில் விஷ மருந்தைக் கலந்து அதை காஸ்ட்ரோவின் அறைக்குள் வைத்தார் மரிடா.
ஆனால் இந்தத் திட்டம் கசிந்துவிட, காஸ்ட்ரோ மரிடாவை அழைத்து அவர் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து ‘இப்படியெல்லாம் செய்வதைவிட நீ என்னை நேரடியாகக் கொன்றுவிடு’ என்று கூற, மரிடா உடைந்து அழுதாராம்.
ஆக அமெரிக்காவுக்குக் கடும் ஏமாற்றம். உயிரைத்தான் எடுக்க முடியவில்லை, வேறுவிதத்திலாவது காஸ்ட்ரோவை நிலைகுலைய வைக்கலாம் என்பதற்காக அவரது பிரபல தாடியை அழித்திடும் வகையில் தாலியம் என்ற ரசாயனப் பொருள் அடங்கிய உணவுப் பொருளை வஞ்சகமாக அவரை உண்ண வைத்தார்கள்.
ஊஹூம், நடக்கவில்லை. அவர் வானொலியில் பேச வரும்போது அங்கு போதைப் பொருளை ஆவி வடிவில் பரப்பி, அவர் பேச்சு குழறலாக வெளிப்படச் செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் “கொலை முயற்சிகளிலிருந்து அதிக முறை தப்பிப்பது என்பது ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருக்குமானால், அதில் எனக்குதான் தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்’’ என்றார் காஸ்ட்ரோ.
இந்தக் கொலை முயற்சிகளெல்லாம் “காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முயற்சிகள்’’ என்ற பெயரில் சானல் 1 என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தொடராக வெளியிடப் பட்டது.
மீண்டும் அதிபர் ஆவாரா காஸ்ட்ரோ என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த நிலையில், 2008-ல் அவர் வெளிப்படையான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “அதிபர் பதவியை இனி நான் ஏற்க மாட்டேன். அந்தப் பதவியில் தொடர்ந்து பல உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒரு பதவியை வகிக்க முழு உடல்நலமும் இல்லாத என்னால் சம்மதிக்க முடியவில்லை’’ என்றார்.
“தேசம் தொடர்பான அத்தனை முக்கிய முடிவுகளிலும் அண்ணன் காஸ்ட்ரோவை நான் கலந்து ஆலோசிப்பேன்’’ என்றார் ரால் காஸ்ட்ரோ. தான் சொன்னதை அரசு மசோதாகவே அவர் அறிவிக்க, 597 தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
கியூபா மக்களுடன் தொடர்ந்து மறைமுகமாக உரையாடிக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோ. நாளிதழ் ஒன்றிலும் தொடர்ந்து தன் எண்ணங்களைப் பதிவு செய்து வந்தார். ‘‘என் வருங்கால உடல்நலம் குறித்துக் கவலைப்படாதீர்கள் மக்களே’’ என்றும் ட்வீட் செய்தார்.
2010ல் நான்கு வருடங்களுக்குப் பிறகு தேசிய பாராளுமன்றத்தில் பேசினார். இரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா அணு ஆயுதங்களை ஏவக் கூடாது என்பதுதான் அவரது பேச்சின் சாரமாக இருந்தது. ஆக உள்நாட்டு விஷயங்களில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றாலும் உலக விவகாரங்களில் அவர் பங்களிப்பு தொடரத்தான் செய்கிறது.
ரால் காஸ்ட்ரோ 2008 பிப்ரவரியில் அதிபராக பொறுப்பேற்றபோது தனது முதல் உரையிலேயே கியூபா மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளில் சில (முக்கியமாக பேச்சுரிமை) தளர்த்தப்படும் என்றார்.
ரால் காஸ்ட்ரோ பற்றிய ஒரு சிறு பின்னணி இதோ. கியூபாவின் அரசியலில் பல வருடங்களாக பங்கு வகித்தவர்தான் இவர். 1950-களி லேயே ராணுவத் தலைவராக விளங்கியவர் என்றாலும் கலகக்காரர். அதாவது அப்போதைய அரசுக்கு எதிரான ராணுவத் தளபதி!. கியூபா கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மத்தியக் குழுவின் முதன்மை செயலாளராக 2011 முதல் இருந்து வருகிறார்.
காஸ்ட்ரோ கியூபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு இவருக்கு மேலும் பல ஏறுமுகங்கள் உண்டாயின. கியூபாவின் அமைச்சர்கள் குழுவின் தலைவராக விளங்கினார். 2006லிருந்து 2008வரை தாற்காலிக அதிபர் பதவியும் இவருக்கு வந்து சேர்ந்தது. முப்படைத் தலைவர் எனற பொறுப்பும் இவரை அடைந்தது.
கியூபாவிலுள்ள பீரான் என்ற இடத்தில் பிறந்தவர் இவர். மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் என்ற பெரிய குடும்பம். மூன்று சகோதரர்களில் ரால் காஸ்ட்ரோதான் இளையவர்.
இளம் வயதிலேயே கம்யூனிஸக் கருத்து களையும், அரசுக்கு எதிரான கருத்துகளை யும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினால் காஸ்ட்ரோ சகோதரர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்கள். பின்னர் ஜெசூட் (கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு) பள்ளியில் படித்தார்கள். ரால் காஸ்ட்ரோ படிப்பில் அவ்வளவு புத்திசாலி என்று சொல்ல முடியாது. (ஆனால் காஸ்ட்ரோ சிறந்த மாணவர். நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்).
ரால் காஸ்ட்ரோவுக்கு மிக இளம் வயதிலிருந்தே சோவியத் பாணியில் அமைந்த கியூபா கம்யூனிஸக் கட்சியில் ஈடுபாடு இருந்தது. இரு சகோதரர்களுமே மாணவப் பருவத்திலேயே அரசுக்கு எதிர்ப்பைக் காட்டும் ஊர்வலங்களில் மிக ஆக்ரோஷமாக ஈடுபட்டனர்.
1953-ல் சோவியத்துக்குச் சென்றிருந்த போது அந்த நாட்டின் உளவுத்துறை ஏஜென்ட் நிகோலாய் லியோனோவ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது பின்னர் கியூபா புரட்சியில் அவருக்கு உதவியது. காலப்போக்கில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் லியானோவ்தான் சோவியத்தின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார்.
1953ல் ‘ஜூலை 26 இயக்கக் குழுவில்’ ரால் உறுப்பினராக இருந்தார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
(உலகம் உருளும்)