அமெரிக்கா கடந்த வார இறுதியில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், கிழக்கு லிபியாவில் செயற்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதக்குழுவின் தலைவர் மொக்தார் பெல்மொக்தார் நிச்சயமாக கொல்லப்பட்டிருப்பார் என்று தாங்கள் நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களமான பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வாரன் கூறியுள்ளார்.
அல்ஜீரியாவில் 2013ல் நடத்தப்பட்ட எரிவாயு ஆலைத் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் பெல்மொக்தார் என அமெரிக்கா நம்புகிறது.
அந்தத் தாக்குதலில் 38 ஆலைப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள்.
அமெரிக்கா தற்போது நடத்திய இந்த தாக்குதலில் மொக்தார் கொல்லப்படவில்லை என்றும்அவருக்குப் பதிலாக, லிபிய தீவிரவாதக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த லிபிய தீவிரவாதக்குழுவுடன் தொடர்பில் உள்ள இஸ்லாமியவாதி ஒருவர் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர் பலமுறை மொக்தார், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து, பின்னர் மறுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கவை.
