காசாவில், 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களின்போது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் ஆகிய இருதரப்புமே போர்க் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என, ஐ நா விசாரணையாளர்கள் தெரிவிதுள்ளனர்.
இருதரப்பும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மிகக் கடுமையாக மீறியிருந்ததது தொடர்பில், தாம் கணிசமான தகவல்களை திரட்டியதாக, ஐ நாவின் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
அந்த மோதல்கள் நடைபெற்ற சமயத்தில் காசாவில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் மனித அவலங்கள் ஆகியவை முன்னெப்போதும் இருந்திராத வகையில் இடம்பெற்றுள்ளதுடன், அது அடுத்துவரக் கூடிய பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐ நாவின் அந்த ஆணயத்தின் தலைவர் தெரிவித்தார்.
ஐ நா விசாரணையாளர்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையானது இஸ்ரேலின் தீவிர ஒழுக்கத்துக்கும் தீவிரவாதிகளின் நடவடிக்கை ஆகியவற்றுக்கும் இடையேயான வித்தியாசத்தை அங்கீகரிக்கத் தவறியுள்ளது என்று இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை காசாவை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ், அறிக்கையின் சில பகுதிகளை வரவேற்றுள்ளது. அந்த அறிக்கை கொலையாளிகளையும் பாதிக்கப்படவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஒராண்டுக்கு முன்னர் நடைபெற்ற அந்த மோதலில் 2200க்கும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். இஸ்ரேலியத் தரப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர். அதில் அதிக அளவினர் இராணுவத்தினர்.
