தேசிய மற்றும் சர்வதேசத் தேவைகளை அடையாளங்கண்டு தேசிய கல்விக் கொள்கையை சீர்செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிப்படையாக தொழில்நுட்பக் கல்லூரிகளைக் காணக்கூடியதாக உள்ள போதிலும்இ அங்கு அதிகளவிலான பாடநெறிகளைக் காண முடிவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரிகள் என்று கட்டடங்கள் இருக்கின்ற போதிலும் அதன் மூலம் சிறந்த பிரதிபலன் நாட்டிற்குக் கிடைக்கின்றதா என்பதனை சிந்திக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தான் தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்துப் பேசியதாகவும் வட மாகாண தமிழ் மாணவர்கள் தமக்கு சிங்களம் கற்றுக்கொள்ள சிங்கள ஆசிரியர்கள் இல்லையென கூறியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
