ரஷ்யா மேலும் நாற்பது புதிய கண்டம் தாண்டும் ஏவுகணைகளை தமது அணுஆயுதப் பட்டியலில் சேர்க்கும் என அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
தம்மால் உருவாக்கப்படும் அந்த ஆயுதங்கள் அதி நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புக்களையும் எதிர்த்து செயல்படும் வல்லமை கொண்டவை என தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இராணுவக் கூட்டம் ஒன்றில் புடின் தெரிவித்தார்.
எனினும் அவை எங்கு நிலைநிறுத்தப்படும் என்பது குறித்து எந்தவிதமான அறிகுறிகளும் வெளியாகவில்லை.
நேட்டோ அமைப்பிலுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தமது இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில், புடினின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதேவேளை புதியதொரு ஆயுதப் போட்டிக்குள் ரஷ்யாவைத் தள்ளும் வகையிலான தூண்டுதலை நேட்டோ முன்னெடுப்பது போலத் தோன்றுகிறது என ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கான துணை அமைச்சர் அனடோலி அண்டோநோவ் தெரிவித்துள்ளார்.
