Monday, 1 June 2015

பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் பிபிசியிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக மஹிந்த போட்டியிடவுள்ளார்
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ, நடைபெறவுள்ள பொதுத் தேரதலிலும் அதே கட்சின் சார்பாகப் போட்டியிட முயற்சிப்பதாக, அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
எனினும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வகிக்கும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு ஜனாதிபதி இணங்காவிட்டால் அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் அவரது பேச்சாளர் கூறுகிறார்.
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகவே போட்டியிடுவார் எனவும் அவரது பேச்சாளர் வலியுறுத்திக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளது என்றும் அவரது பேச்சாளர் குற்றஞ்சாட்டுகிறார்.
இதனிடையே அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...