துருக்கியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள ஏகே கட்சி கடந்த 13 ஆண்டுகளில் முதல்தடவையாக அரசாங்கம் அமைப்பதில் சவால்களை சந்தித்துள்ளது.
அதிபர் ரெஸெப் தையிப் எர்துவானின் ஏகே கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு, அக்கட்சியின் எந்தவொரு போட்டிக் கட்சியும் இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஏகே கட்சி சிறுபான்மை பலம்கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைக்கக்கூடும் என்றும் ஆனால் அந்த அரசாங்கம் ஸ்திரமற்றதாகவே இருக்கும் என்றும் துருக்கியிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், துருக்கியின் பிரதான பங்குச்சந்தை சுட்டெண் 6 வீதத்துக்கும் அதிக வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.
துருக்கிய நாணயமான லீராவின் டாலருக்கு எதிரான பெறுமதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2.8 என்ற அளவுக்கு வீழ்ந்துள்ளது.
