மேகி நூடுல்ஸ் விற்பனை தடைசெய்யப்பட்ட பிறகு ஊரெல்லாம் ஆரோக்கிய உணவைப் பற்றிய பேச்சுதான். பாக்கெட்டுகளில் அடைத்துவைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களைத்தான் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி என்ற கவலை பலருக்கும் உண்டு. சிலர் நேரமின்மை காரணமாக ஜங்க் ஃபுட் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு அடிக்கடி வாங்கித் தருவதுடன் தாங்களும் சாப்பிடுகிறார்கள். இப்படிச் சாப்பிடுவது நல்லதல்ல. சத்து நிறைந்த எத்தனையோ ஆரோக்கியத் தின்பண்டங்கள் இருக்கும்போது எதற்குச் செயற்கை சுவையின் பின்னால் ஓட வேண்டும் என்று கேட்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. எளிதாகச் செய்யக்கூடிய சில ஆரோக்கியத் தின்பண்டங்களின் செய்முறையைத் தருகிறார் அவர்.
நவதானிய கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
தானிய மாவு - 1 கப்
உருண்டை வெல்லம் - அரை கப்
தேங்காய் அரை மூடி
நெய் -1 டீஸ்பூன்
ஏலக்காய் சிறிதளவு
எப்படிச் செய்வது?
கோதுமை, கடலை, பச்சை பயறு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், சிவப்பரிசி, கொள்ளு ஆகிய தானியங்களைச் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றைக் கழுவி, காயவைத்து வறுக்கவும். அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவிலிருந்து 1 கப் எடுத்து, அதனுடன் தூளாக்கிய உருண்டை வெல்லத்தைச் சேர்த்து, நீர் விட்டு நன்றாகப் பிசையவும். தேங்காயைத் துருவி, சிறிது நெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பிசைந்த மாவுடன் இதைக் கலந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சத்து நிறைந்த இந்தக் கொழுக்கட்டையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். பள்ளிக்கு ஸ்நாக்ஸ் போல இதை வைத்து அனுப்பலாம்.
ராஜபுஷ்பம்
