தமது ரகசிய உளவுத் தகவல்களை ரஷ்யாவும் சீனாவும் அறிந்துகொண்டுள்ளதன் மூலம் பிரிட்டிஷ் உளவாளிகள் பலரின் உளவுத்தகவல்கள் 'அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக' பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூத்த அதிகார மையம் ஒன்றிலிருந்து பிபிசிக்கு வந்துள்ள தகவல் கூறுகின்றது.
அதனால், அந்த நாடுகளிலுள்ள பிரிட்டிஷ் உளவுத்துறைப் பணியாளர்களை பணியிலிருந்து அகற்றவேண்டி வேண்டியேற்பட்டுள்ளதாகவும் ஆனால் யாருக்கும் அதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உளவுத்துறைக்காக பணியாற்றி, பின்னர் அமெரிக்காவால் பிடிக்கப்பட வேண்டியவராக அறிவிக்கப்பட்டுள்ள எட்வர்ட் ஸ்நோடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரகசிய ஆவணங்கள் பலவற்றை திருடி கசியவிட்டிருந்தார்.
அந்த ஆவணங்களில் சிலவற்றை சீனாவினதும் ரஷ்யாவினதும் உளவுத்துறை நிபுணர்கள் ஊடுருவி ஆராய்ந்துள்ளதாக பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டிருந்தது.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரையும் பயங்கரவாதிகளையும் கண்காணிப்பது இப்போது மிகவும் சிரமத்துக்குரிய விடயமாகியுள்ளதாக பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வெஸ்ட் பிரபு கூறியுள்ளார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
