Thursday, 11 June 2015

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாக். பீதி !'

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு பெரிதும் பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மியான்மர் நாட்டின் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர், ''எங்கள் நாட்டை பாதுகாக்க எந்த இடத்துக்கும் சென்று பதிலடி கொடுப்போம் என்பதே இதன் மூலம் நாங்கள் விடுக்கும் செய்தி'' என்றார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரிநிசார் அலிகான், ''மியான்மரை போன்று பாகிஸ்தானை தவறாக எடை போடக்கூடாது. மியான்மரில் இந்திய ராணுவம் செய்த சாகசத்தை இங்கு நடத்தினால், எங்கள் ராணுவம் பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது. மேலும், இந்தியாவுக்கு பாடம் கற்பிக்கும் திறமையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் இன்று கூறுகையில், ''ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நமது ராணுவத்தின் சிறிய தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மனநிலையை மாற்றியிருக்கிறது. மேலும், இந்தியாவின் அதிரடி தாக்குதல் சில நாடுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரிதும் பயந்து போனவர்கள் தற்போது பேசத் தொடங்கி இருக்கின்றனர்'' என்றார்.
Loading...