அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஒருபோதும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்!
-செயிட் ஆஷிப், அபூஆதில்-
எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஒருபோதும் கட்சியைக் காட்டிக் கொடுக்கவோ வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விடவோ கிஞ்சித்தும் முற்பட மாட்டேன் என்று கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் மு.கா. கட்சிக் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அலறி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் இன்று சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு வருகை தந்த அவர் தனது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
“அம்பாறை மாவட்டம் பூராகவும் இருந்து 22357 மக்கள் என்னை அங்கீகரித்து வாக்களித்துள்ளார்கள். இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நான் எந்த தவறான நடவடிக்கைகளிலும் எந்த வற்புறுத்தலின் பேரிலும் ஈடுபடப்போவதில்லை .
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி நமது பெண்கள் நோன்பு நோற்று துஆ செய்து பாரிய போராட்டத்துக்கு மத்தியில் வளர்த்தெடுத்த கட்சி.
இந்த கட்சியை சீரழிக்க நான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்காக எந்த சக்திக்கும் துணை போகவும் மாட்டேன்.
கடந்த மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது என முடிவு செய்ததன் பின்னர் கட்சி தனது பேரம் பேசும் சக்தியைக் கொண்டு அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியது.
இதன் பயனாக அரசாங்கத்தின் சார்பாக பல உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக நமது கட்சிக்கு கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த அமைச்சுப் பதவிகளை யார் யாருக்கு பகிர்ந்து கொள்வது என்ற விடயத்தில் தலைவரிடம் ஒருமித்த கருத்து இருந்தது.
ஆனால் நமது உள்ளூர் அரசியல்வாதிகளில் சிலரின் சதியால் அந்த அமைச்சு எனது கையை விட்டுச் சென்றது. கடந்த காலம்களில் எதிர் அணியில் இருந்து கொண்டே நமது சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட வேலைகளை செய்துள்ளேன். இனியும் அவ்வாறே செய்வேன்.
என்னிடம் அமைச்சர் என்ற இறப்பர் முத்திரை மாத்திரம் தான் இல்லையே தவிர ஏனைய அனைத்து தகுதிகளும் திறமைகளும் ஆளுமையும் உண்டு. அவற்றின் மூலம் இந்த மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பேன்.
முதலமைச்சரும் ஆளுனரும் எனக்கு பல உத்தரவாதங்களை வழங்கி உள்ளார்கள். எனது அலுவலகம் வழமையை விட துடிப்புடன் இயங்கும். உங்களது தேவைகளை இங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம்.
எனக்கு அமைச்சு பதவி கிடைப்பதைத் தடுத்த பச்சோந்திகள் இந்த கட்சியை விட்டும் என்னை துரத்த முயற்சிக்கின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் நிச்சயம் தோற்றுப் போவார்கள்.
என்னுடன் மக்கள் சக்தி இருக்கின்றது. எந்தக் காரணம் கொண்டும் இந்தக் கட்சியை விட்டு நான் வெளியேறப் போவதுமில்லை. வெளியேற்றவும் முடியாது. இந்த வக்கற்றவர்களால் என்னைத் துரத்தவும் முடியாது.
நமது மண்ணுக்கு கிடைக்க இருந்த அமைச்சர் அந்தஸ்த்தை தடுத்தவர்கள் பத்திரிகையாளர் மாநாடு ஒன்ரைக் கூட்டி ‘நான் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் குண்டுகளை வெடிக்க வைப்பதாகவும்’ கூறியுள்ளனர்.
இவர்களை அச்சுறுத்த வேண்டிய தேவை எனக்கில்லை. அப்படியான சில்லறை அரசியல்வாதி நான் இல்லை என்பதை இந்த மக்கள் சபை நன்கு அறியும். யார் கடந்த மாநகர சபை தேர்தலைத் தொடர்ந்து வீடுகளையும் கல்வி நிறுவனங்களையும் உடைத்தார்கள்? யார் குண்டுகளை வெடிக்க வைத்தார்கள் என்று ஊர் உலகம் நன்கறியும்.
சில்லறைகளின் அச்சுறுத்தல்களுக்கு நான் ஒருபோதும் அடிபணியப் போவதுமில்லை. அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எனக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு செல்லப் போவதுமில்லை” என்றும் குறிப்பிட்டார்.
Thank - Metro Mirror