வானத்தில் திரளும் கருமேக கூட்டங்கள் ஒன்றோடொன்று வேகமாக மோதும் வேளைகளில் மேகங்களில் உள்ள வேதிப் பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்து, இடி, மின்னலுடன் பெருமழையாக பெய்வதுண்டு. சில வேளைகளில் ஆலங்கட்டி மழையாகவும் இது மாறுவதுண்டு.
இதைப்போன்ற திடீர் பெருமழையை ‘முகிற்பேழ் மழை’ என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.
மிகச் சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால், இவ்வகை மழையால் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கும்.
நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவெடுப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இம்மழை பொழிவானது மணிக்கு சுமார் 100 மில்லி மீட்டர் (3.94 அங்குலம்) அளவிலான நீரை நிலத்தில் பொழியும்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.
மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய குழு புறப்பட்டுச் சென்றது.
காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக யாத்ரீகர்கள் குழு சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டது.
சில நிமிடங்களில் பயங்கர இடி, மின்னலுடன் முகிற்பேழ் மழை கொட்டத் தொடங்கியது. அசுர வேகத்தில் பெய்த பெருமழையில் இருந்து தப்பிக்க வழியில்லாத யாத்ரீகர்கள் நடுவழியில் திண்டாடிப்போய் நின்றனர்.
இந்த மழைக்கு 12 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்டால் மலையடிவார முகாம்களில் சிலவற்றில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதாகவும், மழை சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
