ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒப்பந்தம் இன்று எட்டப்பட்டுள்ளது.
பல வருடங்களாக நடந்துவந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படும்.
பதிலாக, அணுஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய செல்வாக்குமிக்க ஆறு நாடுகளின் குழுவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஆறு வாரங்களாகத் தீவிரமாக நடந்துவந்தது.
இப்போது எட்டப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருக்கிறதா என்ரபதை இனி சர்வேதச சமூகம் அறிந்துகொள்ள முடியும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் முன்பிருந்த தடைகள் மீண்டும் விதிக்கப்படும் எனவும் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹனியும் இந்த ஒப்பந்தத்தை வரேவற்றுள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஈரான் மதித்து நடக்குமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது ஒரு அதிர்ச்சி தரத்தக்க வரலாற்றுத் தவறு என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஐநாவின் ஆய்வாளர்கள் ஈரானின் ராணுவ அணுசக்தித் தலங்களைக் கண்காணிக்க முடியும். இருந்தபோதும், அங்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுத்து ஈரான் வாதாட முடியும்.
இந்த ஒப்பந்தம் மீறப்பட்டால் 65 நாட்களில் மீண்டும் தடைகள் அமலுக்கு வரும் என்பதை ஈரான் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை.
இருந்தபோதும் ஈரான் ஆயுதங்கள் வாங்குவதற்கான தடை ஐந்தாண்டுகளுக்கும் ஏவுகணைகள் வாங்குவதற்கான தடை எட்டாண்டுகளுக்கும் நீடிக்கும்.
எண்ணெய் - எரிவாயு வர்த்தகம், நிதி பரிமாற்றம், விமானத் துறை, கப்பல்துறை ஆகியவற்றில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்படும்.
உலகம் முழுவதும் முடக்கிவைக்கப்பட்டிருந்த பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஈரானின் சொத்துக்கள் விடுவிக்கப்படும்.
ஈரானின் மீதான தடைகள் நீக்கப்படும் நிலையில் அந்நாட்டிடம் பெரும் அளவில் நிதி சேரும். அந்த நிதி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வல்லரசு நாடுகள் கண்காணிக்க வேண்டும் என பிரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந் தெரிவித்துள்ளார்.
