கரீபியப் பகுதியில் வீசிய கடும் புயலின் காரணமாக, டொமினிகா தீவில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
எரிகா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புயலின் காரணமாக, ஏற்பட்ட வெள்ளமும் நிலச்சரிவும் நாட்டை 20 வருடங்கள் பின்னுக்கு இழுத்துச் சென்றுவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.
ஹைதியிலும் டொமினிகன் குடியரசிலும் காற்றும் 85 கி.மீ. வேகத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஞாயிற்றுக்கிழமையன்று புயல் தாக்கும் எனக் கருதப்படுவதால், அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள், சாலைகள் இந்தப் புயலின் காரணமாக சேதமடைந்திருப்பதாக தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் ரூஸ்வெல்ட் தெரிவித்தார்.
இந்தப் புயலின் காரணமாக எரிகாவில் 38 சென்டிமீட்டர் மழை பெய்தது.
72 ஆயிரம் பேர் வசிக்கும் டொமினிகாவில் குறைந்தது 31 பேரைக் காணவில்லையென பார்படோஸில் இருந்து செயல்படும் கரீபியப் பேரழிவு அவசர உதவி முகமை அறிவித்திருக்கிறது.
பிற கரீபிய நாடுகளும் புயல் எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன.
ப்யூர்டோ ரிகோவில் எரிகாவின் காரணமாக 20,000 பேர் மின்சார வசதி இழந்து தவிக்கின்றனர். 10 மில்லியல் பவுண்டு மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.
இதற்கிடையில், ஃப்ளோரிடா மாகாண ஆளுடன் ரிக் ஸ்டாக் அங்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். சில நாட்களுக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் சேகரித்துவைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தவிர, பசிபிக் கடலில் இக்னாசியோ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி, பெரும் புயலாக வலுப்பெற்றுவருகிறது. ஹவாயிலிருக்கும் ஹிலோவுக்கு தென்கிழக்கே மையம் கொண்டிருக்கும் இந்தப் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்துவருகிறது.
