ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பாக புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.
தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள போதும், விரைவில் இதன் தீர்ப்பு வெளியாகும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்று நடைபெற்ற இறுதி வாதத்தில், மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிட்டார்.
அப்போது தண்டனை பெற்றவர்களின் தரப்பு வாதத்திற்கு பதிலளித்தார். அதில் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்ததே போதுமானது என்பதாக கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு உள்ளதா அல்லது இருவரும் கலந்து முடிவெடுக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வாதங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்றன.