அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இல்லினாயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த மர்ம வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, நான் ஒபாமாவின் மகன். இன்றிரவு 11 மணிக்கு என்னை சந்திப்பதற்காக எனது தந்தை ஒபாமா இங்கு வரப் போகிறார் என்று பதில் அளித்தார்.
அவரது முதுகில் இருந்த பையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் சிறப்பு படையை வரவழைத்தனர். அந்த பையை பரிசோதித்தில் அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து, மார்க்கெஸ் ஹாஸல்(20) என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டரை லட்சம் டாலர்கள் பெற்றுக் கொண்டு அவரை ஜாமினில் விடுவிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, அந்த வாலிபர் அடுத்து எங்கெங்கு செல்கிறார்? என்று அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும் மின்னணு வளையத்தை (electronic monitoring bracelet) அவரது கையில் கட்டி விடுதலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கையில் எத்தகைய ஆபத்தான பொருளையும் கொண்டு செல்லாத எனது கட்சிக்காரரை தேவையில்லாமல் கைது செய்து சிறையில் அடைத்தது தவறு. அவர் மீது வழக்கு போடுவதற்கு முன்னதாக அந்த வாலிபரின் குடும்ப பின்னணி, குற்றப் பின்னணி, அவரது மனநிலை ஆகியவற்றையும் போலீசார் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என மார்க்கெஸ் ஹாஸலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
