நாம் உள்ளெடுக்கும் உணவு தொடர்பில் சுயகட்டுப்பாட்டினை வீட்டில் பேணினாலும், சமூக நோக்கில் அதனைக் கடைப்பிடிப்பதென்பது சற்றே கடினமானதாகவே தென்படுகின்றது.
பிறந்த நாள் விருந்துகள், திருமண வைபவங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படுகையில், அங்கு பரிமாறப்படும் உணவுகள் மற்றும் பானங்கள் உடல்நலத்திற்கு உகந்தவையாகக் காணப்படுவதில்லை. அளவுக்கு அதிகமாக கொழுப்பு மற்றும் நெய் சேர்க்கப்பட்டவையாக அங்கு பரிமாறப்படும் உணவுகள் அமைவதோடு, இனிப்பு மிகுந்த குளிர்களி, பழச்சாறுகள் மற்றும் அதிக சீனி சேர்க்கப்பட்ட மென்பானங்கள் என நோய்களுக்கு ஆளாக்கும் உணவுகளே அதிகம் பரிமாறப்படுகின்றன.
தற்போது, அநேகமான திருமண வைபவங்களுக்கான உணவுகள் உணவகங்களால் பரிமாறப்படுவதால், வருங்கால வாடிக்கையாளர்களைக் கருதி, உணவுகளைச் சுவையூட்டுவதற்கு ‘அஜினமோட்’ என்ற வேதி உப்பும் அளவு கணக்கின்றி அந்த உணவுகளில் சேர்க்கப்படுகின்றது.
இவ்வாறான வைபவங்களுக்குச் செல்லுகையில், நாகரிகம் என்ற பெயரால் பரிமாறப்படுபவைகளை அருந்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
தற்போது நவீன உணவகங்கள் நாட்டின் தலைநகரங்களில் மட்டுமல்லாமல், மாவட்டங்களின் பிரதான நகரங்களிலும் அந்த நவீன உணவகங்கள் முளைத்துள்ளன. இங்கே, ‘பேகர்’ (Burger) போன்ற புதிய நவநாகரிக உணவுகளுடன் காபனீரொட்சைட்டு வாயு உள்ளடக்கப்பட்ட நுரை ததும்பும் மென்பானங்கள், பொரித்த உருளைக்கிழங்கு எனப் பல பரிமாறப்படுகின்றன.
அவற்றின் விலைகளும் அதிகமாக இருந்தபோதிலும் தமது உழைப்பினை அங்கு விரயம் செய்யும் இளந்தலைமுறைகளையும் அதிகம் காணக்கூடியதாகவுள்ளது. மேற்குறிப்பிட்ட ‘பேகர்’ என அழைக்கப்படும் உணவு குறித்தும், அதை ஒத்த ஏனைய உணவுகள் குறித்தும் பல அக உண்மைகளை அமெரிக்க மினசொற்றா பல்கலைக்கழக ஆய்வாளர் David Tilman விபரித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பலரையும் மீண்டும் மீண்டும் கவர்ந்து கொண்டிருக்கும் இந்த உணவுவகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல என ஆய்வாளர் கோட்டிட்டுக் காட்டுகின்றார். இவ்வுணவுகளில் அதிக அளவிலான சீனி, அதிக பதனஞ் செய்யப்பட்ட செறிவாக்கப்பட்ட கொழுப்பு மற்றும் விலங்குப் புரதம் ஆகியவை அதிகம் காணப்படும் அதேவேளை, நார்ப் பொருட்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், அதிக கலோரிப் பெறுமானத்தினைக் கொண்டதாக இந்த உணவுகள் அமைகின்றன.
எனவே, உணவை உள்ளெடுக்கும் நபர்கள் அதிக பருமன் கொண்டவர்களாக மாறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இந்த உணவுகளில் fructose மற்றும் palmitic ஆகிய வேதிஅமிலங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த அமிலங்கள் மனிதனின் நோய் எதிர்ப்புத் தொகுதியை சீண்டுவதாக அமைவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார். இச்சீண்டுகை காரணமாக, உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி குழப்பமுற்று, சமிபாட்டுத் தொகுதியில் சமிபாட்டிற்கு உதவும் E.coli பக்டீரியா நுண்ணங்கிகளையும் அழித்தொழிக்கின்றன. இக்குறிப்பிட்ட வேதிஅமிலங்கள் ஏற்படுத்தும் குழப்பங்கள் காரணமாக உடலின் நோயெதிர்ப்புத் தன்மை நலிவடைந்து செல்லும் என ஆய்வாளர் வலியுறுத்துகின்றார்.
ஐக்கிய நாடுகளின் சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் 2014 ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லி யன் இளவயதினர் குண்டானவர்களாகவும் மற்றும் ஏறத்தாழ 2 பில்லியன் இளவயதினர் அதிக நிறை கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களாக 374 மில்லியன் மக்கள் காணப்படுகின்றனர். இலாபத்தினை நோக்காகக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் தம்மிடம் வருவதற்காக தம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வர் என்பது நிச்சயம்.
எனவே, எம்மை நாமே நாவின் ஈர்ப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம். சமூக வைபவங்களிலும் உணவுத் தெரிவுகளில் நாம் முன்மாதிரியாக நடந்து கொள்வதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு எனக் கருதுபவற்றை புறக்கணிக்கவும் தயங்கக்கூடாது. இந்நடவடிக்கைகளை நோய் வரும்வரை காத்திருக்காது, வருமுன் காக்க முன்வரவேண்டும். அல்லாவிடின் நோய் வந்தபின்னர் வைத்தியசாலைகள் முன்னால் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டியேற்படுவதுடன் வைத்தியர்களின் கண்ணியமற்ற நச்சரிப்புகளுக்கு ஆளாகவும் நேரிடும்.
அ.ஹரின் சுலக்ஸ்ஸி
யாழ். நகர்
