கிர்க
நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த கல் தூண்களால் ஆன மிகப்பெரிய "ஈமச்சடங்கிடம்" ஒன்றை பிரிட்டனின் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் என்று அழைக்கப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது.
வட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த "ஈமச்சடங்கிடத்தை" தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் இருக்கும் தூண்கள் 15 அடி உயரம் வரை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நினைவிடம் மிகவும் பிரம்மாண்டமானது என்றும், தனித்தன்மை வாய்ந்தது என்றும் கருதப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வாளர்கள் இந்த பகுதியில் நிலத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வழக்கமாக தொல்லியல் ஆய்வாளர்கள் செய்வதைப் போல நிலத்தை தோண்டிப் பார்க்காமலே நிலத்தடியில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவதில் இவர்கள் ஈடுபட்டனர். இதற்காக தொலை-உணர் மற்றும் நிலத்தடி ஊடுறுவல் தொழில்நுட்பத்தை இவர்கள் பயன்படுத்தினார்கள்.
இந்த இடத்தில் நூறு கல்தூண்கள் மண்ணில் வட்டவடிவில் புதையுண்டு இருக்கின்றன. இது நியோலிதிக் காலத்திய ஈமச்சடங்குகளுக்கான இடமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த இடத்துக்கும், அதையொட்டிய ஏவன் நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நீரூற்றுக்கள் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
நிலத்திற்குள் புதையுண்டிருக்கும் தூண்கள் எவையும் இதுவரை வெளியில் தெரியும்படி அகழ்வுகள் எவையும் நடக்கவில்லை. ஆனால் இந்த தூண்கள் அனைத்தும் அந்த பிரதேசத்தில் காணப்படும் மணற்பாறைகளால் ஆனவை என்று கருதப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த நினைவிடத்தின் அளவு தற்போதைய ஸ்டோன்ஹெஞ்ச் நினைவிடத்தின் அளவை விட ஐந்துமடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இடத்தை ஆங்கிலத்தில் சூப்பர்ஹெஞ்ச் என்று அழைக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
“இது போன்றதொரு பிரம்மாண்ட ஈமச் சடங்குகளுக்கான வளாகம் உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரும் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான வின்ஸ் கேஃப்னி.
ஸ்டோன்ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த நினைவிடமும் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் ஸ்டோன் ஹெஞ்சும் இந்த நினைவிடமும் தனித்தனியாவை என்பதை விட இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒரே தொகுதி ஈமக் கிரியைகளுக்கான மிகப்பெரும் தொடர் வளாகமாக இருந்திருக்கக் கூடும் என்றும் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.
இவை அனைத்தும் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதிலும், இங்கே நடந்திருக்கக் கூடிய சடங்குகள் என்னவாக இருந்திருக்கக் கூடும் என்பதிலும் இன்னமும் அனைத்து தரப்பாலும் ஏற்கத்தக்க உறுதியான ஒருமித்தக் கருத்து உருவாகவில்லை.
