குரொயேஷியா வழியாக அகதிகளும் குடியேறிகளும் ஹங்கேரியினுள் வருவதை தடுக்கும் நோக்கில் குரொயேஷியாவுடனான தனது எல்லையின் ஒரு பாகத்தில் ஹங்கேரியப் படையினர் முட்கம்பி வேலி அமைத்து வருகின்றனர்.
நூற்பது கிலோ மீட்டர் நீளமான ஒரு பாகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் கம்பிவேலி அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட வேண்டும் என தாம் பணித்துள்ளதாக பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்தார்.
மண்மேடுகள்போல ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் அப்பகுதியில் எதுவும் கிடையாது என வானொலி ஊடாக மக்களுக்கு தெரிவித்த அவர், மேலதிக காவல் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
செர்பியா ஊடாக வந்த அகதிகளுக்கு அந்த நாட்டுடனான தனது எல்லையை ஹங்கேரி இந்த வார ஆரம்பத்தில் மூடியிருந்தது.
அதன் பின்னர் வடக்கு ஐரோப்பிய நாடுகள் நோக்கி வரும் குடியேறிகள் குரொயேஷியா ஊடாகச் செல்ல முயன்றுவருகின்றனர்.
