சிரியாவின் அகதிகள் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு (ஓஐசி) சவுதி அரேபிய நகரான ஜெத்தாவில் அவசரக் கூட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது.
ஜோர்தான், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய உறுப்புநாடுகள் சிரியாவிலிருந்து இடம் பெயர்ந்துள்ள சுமார் 40 லட்சம் மக்களை பராமரிக்கின்றன.
ஆனால், சவுதி அரேபியாவும் மற்ற பல வளைகுடா நாடுகளும் போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
இருபது லட்சத்துக்கும் அதிகமான சிரிய மக்களை சவுதி பராமரித்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு வெள்ளியன்று தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த எண்ணிக்கை தொடர்பில் கணிசமான சந்தேகம் இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சிரிய மக்களுக்கு இன்னும் உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐநா கூறியுள்ளது.
