இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தை இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றுள்ளன.
ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருக்கிறார்.
2009ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வருடங்களில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், அவை கவனிக்கப்படவில்லையென்று கூறியிருக்கும் மங்கள சமரவீர, இதனால், இலங்கை மீது சர்வதேச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றும் விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்தது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் உறுதியான முயற்சிகளின் காரணமாக பொறுப்பான, உறுதியான அமைதியை விரும்பும் தேசமாக இலங்கை உருவெடுத்துள்ளது என அவர் கூறியிருக்கிறார்.
உண்மை, நீதி ஆகியவற்றின் வழியாக நல்லிணக்கத்தை எட்டவேண்டும் என்ற இலங்கை அரசின் முயற்சிகளில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலையும் இணைத்துக்கொள்வதில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் வரவேற்பு
இந்த அறிக்கை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவுத் தீர்மானத்தை வரவேற்பதாக கூறியுள்ளது.
இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் நீதிப் பொறிமுறையில் வெளிநாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் இடம்பெற வேண்டும் என இந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதை வரவேற்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
இம்மாதிரியான ஒரு நீதிமன்றத்தை உருவாக்குவதிலும் அதன் செயல்பட வைப்பதிலும் அரசுக்கும் சர்வதேசப் பங்காளிகளுக்கும் உதவப் போவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வரைவு அறிக்கைக்கு சம்மதம் அளித்து, மனித உரிமைப் பேரவையில் இணைந்து பிரேரித்துள்ள இலங்கை அரசுக்கும் கூட்டமைப்பு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
இந்த ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழியானது பாதிக்கப்பட்ட சிலருக்கு உவப்பானதாக இருக்காது என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இருந்தபோதும், நல்லிணக்கத்தை நோக்கிய நீண்ட பாதையில் இந்த வரைவுத் தீர்மானம் ஒரு துவக்கப்புள்ளியாக அமையும் என தாங்கள் நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நம்பிக்கை
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விஷயங்களில் மனித உரிமைப் பேரவையில் இலங்கையும் பிரிட்டனும் ஒன்றாக ஒத்துழைக்கும் முதல் சந்தர்ப்பம் இது என பிரிட்டனின் ஆசிய விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் ஹ்யூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளின் மீதும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையரின் பரிந்துரைகளின் மீதும் மேலதிகமாக எடுக்கப்படும் ஒரு நகர்வாக இந்த தீர்மானம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அக்டோபர் முதல் தேதி ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கிறோம் என்றும் ஹ்யூகோ ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.
