Thursday, 1 October 2015

இன்று அமெரிக்க பிரேரணை நிறைவேறும் சாத்தியம்









இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையானது, இன்று (வியாழக்கிழமை) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறை வேற்றப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் ஆரம்பத்தில் ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகள், குறிப்பாக கலப்பு நீதிமன்றம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்த போதும், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் அழுத்தம் காரணமாக அது திருத்தப்பட்டு 20 அம்சக் கோரிக்கைகையாக அண்மையில் ஐ.நாவில் அதன் நகல் வடிவம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பிரேரணையில் கலப்பு சிறப்பு நீதிமன்றம் என்பதற்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் ஏனைய சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை நீதிமன்றம் அமைக்கலாமென பரிந்துரைக்கப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது கரிசனை கொண்ட நாடுகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவைத்துள்ளது. உள்ளக விசாரணைக்கு வலுசேர்க்கும் வகையில், சர்வதேச விசாரணை மற்றும் கலப்பு நீதிமன்ற கொள்கையை எதிர்த்துவரும் இலங்கைக்கு சாதகமாகவே குறித்த பிரேரணை நிறைவேற்றப்படுமென புத்திஜீவிகளும் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனால் நேற்று வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையில், இலங்கையின் நீதித்தறையானது யுத்தக் குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு போதுமானதல்லவெனவும், கடந்த கால நம்பத்தன்மையற்ற செயற்பாடுகள் காரணமாகவும் கலப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

எனினும், அது எந்தளவு நடை முறைப்படுத்தப்படும் அல்லது எந்த வகையில் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்படும் விதத்திலேயே தங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் நீதியை நிலைநாட்டல் உள்ளிட்ட செயற்பாடுகள் அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், யுத்த குற்ற விசாரணை தொடர்பில், திருத்தப்பட்ட பிரேரணையில் தெளிவற்ற போக்கு காணப்படுவதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப் படுகின்ற பிரேரணையானது, அநேகமாக இலங்கை மற்றும் இலங்கைக்கு சார்பாக குரலெழுப்பிய பல நாடுகளுக்கு சாதகமாகவும், உள்ளக விசாரணைக்கு வலுசேர்ப்பதாகவுமே அமையுமென தெரிவிக்கப்படுகிறது.
Loading...