ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டுஸ் நகரில் உள்ள தமது மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலை எம்எஸ்எஃப் (எல்லைகளற்ற மருத்துவர்கள்) தொண்டுநிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த மருத்துவமனையில் நோயாளிகளும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர்.
குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின்மீது நடத்தப்பட்டுள்ள விமானத் தாக்குதலுக்கு 'தாங்கள் பொறுப்பாக இருக்கக்கூடும்' என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தங்களின் பணியாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதை எம்எஸ்எஃப் தொண்டுநிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் 37 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். அவர்களில் 19 பேர் எம்எஸ்ஃஎப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
இரவு நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மேலும் பலர் தொடர்பில் தகவல்கள் இல்லை என்றும் எம்எஸ்எஃப் கூறியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் தங்களின் மருத்துவ பணிகள் நடக்கின்ற எல்லா இடங்கள் தொடர்பிலும் தெளிவான தகவல்களை ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
