அமெரிக்கக் கண்டத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிக சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் பாட்ரீசியா சூறாவளி கரையைக் கடந்ததையடுத்து, அங்கு பெரும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் புயல் கரையைக் கடந்ததயடுத்து, பெரும் காற்றும் மழையும் அடித்தது. ஆனால், மிகப் பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த பாட்ரீசியா சூறாவளி, இருப்பதிலேயே உச்சபட்ச அளவான ஐந்தாம் நிலை புயலாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது மழையின் காரணமாக வெள்ளமும் சேறுகளினால் நிலச்சரிவும் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
நயாரிட், ஜாலிஸ்கோ, கோலிமா, மிசோவாகான், குவெர்ரெரோ ஆகிய மாகாணங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
புயல் கரையைக் கடந்த பிறகு, வலுவிழந்து நான்காம் நிலைப் புயலாக பாட்ரீசியா மாறியுள்ளது. மலைபகுதிகளை நோக்கிச் செல்லும்போது இது மேலும் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறும் என கூறப்பட்டிருக்கிறது.
கொலிமா எரிமலை இந்த வருடம் முழுக்க அவ்வப்போது வெடித்துக்கொண்டேயிருந்த நிலையில், அதன் சாம்பலும் மழையும் சேரும்போது சேறு ஆறாக ஓடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருப்பதாக மெக்ஸிகோவின் தேசியப் பேரழிவு நிதியம் கூறியுள்ளது.
ஜாலிஸ்கா மாகாணத்தில் உள்ள க்விக்ஸ்மலா பகுதியில் இந்தச் சூறாவளி கரையைக் கடந்தது.
இந்தப் புயலை எதிர்பார்த்து பொதுமக்கள் உணவுப் பொருட்களை தேவையான அளவு வாங்கிச் சேமித்தனர்.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான சில புயல்கள்:
அக்டோபர் 1979: டிப் புயல் - வரலாற்றில் பதிவானதிலேயே மிகப் பெரிய, மிகத் தீவிரமான புயல் இது. 305 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயலால் பசுபிக் நாடுகளில் 99 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜப்பானியர்கள்.
ஆகஸ்ட் 1980: ஆலன் சூறாவளி - காற்றின் வேகத்தின் அடிப்படையில் பார்த்தால் அட்லாண்டிக் கடலில் தோன்றியதிலேயே மிக வலுவான புயல் இது. இந்தப் புயல் வீசியபோது 305 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஹைதியில் 300 பேர் மரணமடைந்தனர். டெக்ஸாலில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஏப்ரல் 1991: 02பி என்று அறியப்பட்ட இந்தப் புயல் வங்கதேசத்தைச் சூறையாடியது. குறைந்தது ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடி பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
அக்டோபர் 1991: பாரதீப் புயல் அல்லது ஒதிஷா புயல் - வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டதிலேயே மிக வலுவான புயல் இது. குறைந்தது பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 2005:காத்ரீனா சூறாவளி - லூசியானா, மிசிஸிபி ஆகிய அமெரிக்க மாகாணங்களைத் தாக்கிய இந்தப் புயல் குறைந்தது 1,836 பேரைப் பலிகொண்டது. 81.2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்திய இந்தப் புயல்தான் வரலாற்றிலேயே அதிக சேதத்தை ஏற்படுத்திய புயலாககருதப்படுகிறது.
அக்டோபர் 2005:வில்மா சூறாவளி - அட்லாண்டிக் கடல் பகுதியில் ஏற்பட்ட தீவிரமான இந்த வெப்ப மண்டலப் புயல் 87 உயிர்களைக் காவுகொண்டது. கரீபியன், மெக்ஸிகோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர்.
நவம்பர் 2013:ஹையான் சூறாவளி - கரையைக் கடக்கும்போது மிக வலுவாக இருந்த புயல். ஒரு கட்டத்தில் 315 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஃபிலிப்பைன்ஸை சூறையாடிய இந்தப் புயலில் 6,300 பேர் கொல்லப்பட்டனர்.
