Sunday, 4 October 2015

தமிழ் சினிமா கதாநாயகர்கள் சிறார்களிடையே புகைத்தலை தூண்டுகின்றார்களா?

Image caption'பெரும்பாலான சிகரெட் பாவனையாளர்கள் பதின்ம வயதிலேயே புகைத்தலை துவங்குகின்றனர்'
தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும்அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளில் பங்கெடுத்திருந்த உளவியல் மருத்துவர் எம். கணேஷன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
உதாரண புருஷர்களை பின்பற்றுகின்ற வழக்கம் சிறார்கள் மத்தியில் இருப்பதால், சினிமா கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும்போது அவர்களை பின்பற்ற நினைக்கும் சிறார்களும் புகைத்தலுக்கு தூண்டப்படுகிறார்கள் என்றும் மருத்துவர் கணேஷன் தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு விளம்பரம் செய்யமுடியாத நிலை இருப்பதால் சிகரெட் நிறுவனங்கள் புகைத்தல் காட்சிகளை ஊக்குவிப்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் கணேஷன் குற்றம்சாட்டினார்.
நேரடி விளம்பரம் இல்லாமல் பொருளை காட்சிப் படுத்துவதன் மூலம் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசியாவில் புகைத்தல் பழக்கம் குறைந்து வரும் ஒரே நாடு இலங்கை தான் என்று கூறிய மருத்துவர் கணேஷன், ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.
Loading...