Sunday, 18 October 2015

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று சென்னையில் உள்ள செயிண்ட் அப்பாஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
Image captionசென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
விரைவில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்படவிருக்கிறது. இந்திய நேரப்படி இரவில் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2006ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தல் ஊடகங்களாலும் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக கவனிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவருகிறது.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள் கூட தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றன.
Image captionநடிகர் விஷால் உள்ளிட்ட யாருமே தாக்கப்படவில்லையென தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
இன்று காலையில் வாக்குப் பதிவு மையத்திற்குள், நடிகர் விஷாலைச் சிலர் தாக்க முயன்றதாக செய்திகள் பரவின. ஊடகத்தினர் அனுமதிக்கப்படாத பகுதிக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றதது.
ஊடகங்களிடம் பேசிய விஷால், தன்னை யார் தாக்க முயன்றாலும் தேர்தல் அமைதியாக நடக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய சரத்குமார், வாக்குப் பதிவு நடைபெறும் இடத்தில் விஷால் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் யாரும் தாக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
Image captionதேர்தல் நடக்கும் பகுதிக்குள் ஊடகங்கள் செல்ல அனுமதியில்லை என்பதால், வெளியில் டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பெயர் குறித்து கமல், ரஜினி கருத்து

முன்னதாக, வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த், வெற்றிபெறுபவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என கூறினார்.
அதற்குச் சிறிது நேரத்திற்குப் பிறகு வாக்களித்த நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டுமெனக் கூறினார்.
இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் விஷாலை முன்னிலைப்படுத்தி மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.
இந்தத் தேர்தலில் 3139 பேர் வாக்களிக்க முடியும். தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தனர். தபால் வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 783 பேர் தபால் மூலமாக வாக்களித்துள்ளர்.
Image captionமுன்னெப்போதும் இல்லாத வகையில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு தமிழக ஊடகங்கள் கடந்த ஒரு மாத காலமாக முக்கியத்துவம் அளித்துவருகின்றன.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தபால் வாக்குகளையும் சேர்த்து 2597 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்தத் தேர்தலை தமிழக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிவருகின்றன. தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பிவருகின்றன.
Loading...