சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்வோர் குறித்து நடவடிக்கை
சுற்றுலா வீசா அனுமதிகளை பெற்று குவைத் உட்பட பல நாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக நபர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அது குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு அமைச்சர் தலதா அத்துகோரள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறு சுற்றுலா வீசா அனுமதியில் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 11 பேர் அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 4 அதிகாரிகள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சுற்றுலா வீசாவில் நபர்களை தொழில் வாய்ப்புகளுக்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தின் பின்னணியில், வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகள், உப முகவர்கள் சில அதிகாரிகளும் உள்ளனர்.
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க புதிய பணிப்பாளர் சபை ஒன்றையும் அமைச்சர் தலதா அத்துகோரள நியமித்துள்ளார்.
