தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய மனோரமா, சனிக்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.
நீண்டகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மனோரமா, தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பதினொரு மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும், அவர் உயிரிழந்தார்.
மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் மூலம் 1958ல் திரையுலகில் அறிமுகமான மனோரமா, 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மிகச் சிறந்த நகைச்சுவை நடிகை எனப் பெயர் பெற்ற அவர், சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்தார்.
நாடகங்களிலும் நடித்த அனுபவம் கொண்ட மனோரமா, பாடுவதிலும் திறமை வாய்ந்தவர். பழம்பெரும் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பல இசைமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் பாடியிருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் பிறந்த மனோரமா, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜியில் துவங்கி தற்போதைய இளம் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார்.
