Wednesday, 7 October 2015

பொலிஸாரின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை--மஹிந்த











கொட்டாதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சேயா கொலை குறித்த பொலிஸ் விசாரணைகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அமையவில்லை.

அன்று முதல் இன்று வரையில் பொலிஸார் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) பிடித்தால், பிடிபடுபவர்கள் வசதி குறைந்தவர்களாக இருப்பார்கள். போதைப்பொருள் தொடர்பில் அதனை பிடிப்பவர்களையே கைது செய்கின்றனர். பெரியவர்கள் பலம் பொருந்தியவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென இன்று விவாதம் செய்கின்றார்கள்.

சேயா சிறுமியின் கொலை குறித்து பொலிஸார் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கொலையுடன் கொண்டயாவிற்கு தொடர்பு உண்டு எனக் கூறுகின்றார்கள். பின்னர் கொண்டயா இல்லை, அவரது சகோதரரே கொலையைச் செய்தார் என்கிறார்கள்.

பாடசாலை மாணவர் ஒருவருக்கும் திருமணமான ஒருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. என்ன நடக்கின்றது? இந்த நிலையில் என்றாவது ஒர் நாள் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய நிலைமை என்ன? இதன்படி மரண தண்டனை யாருக்கு வழங்கப்படும் என்பதே கேள்வியாக அமைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பாரதூரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...