Thursday, 26 November 2015

பிரான்ஸில் ஹிஜாப் அணிந்ததால் வேலை இழந்தவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

முஸ்லீம் தலையங்கியான, ஹிஜாபை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவுக்கு பணிய மறுத்ததால் வேலை இழந்த பிரெஞ்சு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தொடுத்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
Image copyrightAFP
Image captionமத விசுவாசங்களைக் காட்டும் எந்த ஒரு ஆடையையும் அரசு அதிகாரிகள் அணிய பிரான்ஸில் தடை இருக்கிறது
இந்த வழக்கை கிறிஸ்தியேன் இப்ராஹிமியான் என்ற பெண் தொடுத்திருந்தார். ஆனால் , மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு குறியீடையும் அணிவது அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் கடமை விதிகளை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு மூன்று மாத அவகாசம் இருக்கிறது.
பாரிஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் உளவியல் துறையில் சமூகப்பணியாளராக வேலைபார்த்து வந்த கிறிஸ்தியேன் இப்ராஹிமியானின் பணி ஒப்பந்தம் 2000ம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை.
அவர் பணியில் இருக்கும் நேரங்களில் தலையங்கியை ( ஹிஜாபை) அகற்ற மறுத்தார் என்று கூறிய மருத்துவமனை, இது குறித்து பல நோயாளிகளிடமிருந்து தனக்குப் புகார்கள் வந்ததாகவும் கூறியது.
கடந்த பத்தாண்டு காலத்தில் இப்ராஹிமியான் இந்த மருத்துவமனையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெறப் போராடியும், பல பிரெஞ்சு தீர்ப்பாயங்கள் அவரது விண்ணப்பங்களை நிராகரித்தன.
இப்போது , ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றமும் அவரது வழக்கை நிராகரித்து, பிரன்ஸில் அமலில் உள்ள பணியிட நடைமுறைகளைப்பற்றி தீர்ப்பு சொல்வது தனது வேலையல்ல என்று கூறிவிட்டது.
பிரான்சில் , முகத்திரை போன்ற அங்கிகளை அணிவது, மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் செயல் என்று கருதப்படுகிறது. அரசு அதிகாரிகள் வேலையில் இருக்கும்போது மத சம்பந்தமான விவகாரங்களில் பக்கசார்பற்ற தன்மையைக் காட்டுமாறு கோரப்படுகிறார்கள்.
Loading...