வவுனியா மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன : சிவசக்தி ஆனந்தன்
வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும் தமது திணைக்களத்துக்கு உரித்துடைய காணிகள் எனக்கூறி வன இலாகா திணைக்களம் சுவீகரித்து வருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வவுனியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகளுக்கு முறைப்படியான உறுதிப் பத்திரங்கள் காணப்படவில்லை. நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அவற்றுக்கு முறைப்படியான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடுகள் தவறவிடப்பட்டுள்ளன.
எனினும் குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகளென எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமன்றி மக்களுக்குச் சொந்தமான அக்காணிகளுக்கு மிக விரைவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னரும் கூட, நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வரும் அக்காணிகளை தமது திணைக்களத்துக்கு உரித்துடையவை என்று வன இலாகாவினர் தெரிவித்து எல்லைக்கற்கள் நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய பூர்வீக காணிகளை சுவீகரிக்க நான்கு வகையான உத்திகள் பின்பற்றப்படுகின்றன. முப்படைகளுக்கென்றும், வன இலாகா திணைக்களத்துக்கு சொந்தமானது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கு என்றும், பறவைகள் சரணாலயத்துக்கு என்றும் வகைப்படுத்தி காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.