சட்டங்களை நடைமுறைப்படுத்த தாமதித்தால் இளைஞர் கிளர்ச்சி வெடிக்கும்
நாட்டில் அதிகாரமிக்க தரப்பினருக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படுவதில்லை என, பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்நிலைமை நீடித்தால் விரைவில் இளைஞர் கிளர்ச்சி ஏற்பட வழிவகுக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நாட்டின் பொருளதாரத்தை தாக்கும் அளவிற்கு பாரிய தொழில்நுட்ப மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஊழல், மோசடிகளை இல்லாதொழிக்க சட்டம், அரசியலமைப்பு, தொழில்நுட்ப ரீதியாக பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றார். குறிப்பாக அவன்கார்ட் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் மீது தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
ஊழல், மோசடிகளை தடுத்து நிறுத்தவும், அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்குதே மக்கள் ஆணை வழங்கப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் சட்டத்தின்மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின், தராதரம் பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டதோடு, ஜனாதிபதியும், பிரதமரும் இதுகுறித்து விரைவில் தீர்மானம் எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
