பாரீஸ் தாக்குதல் : இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
பிரான்ஸ், பாரீஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என பாரீஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பாரிஸில் 7 இடங்களில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவத்தில் 158க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது.
மேலும் அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் எவருக்கு அவசர உதவி தேவைப்படுமாயின் +33620505232, +33677048117 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம் : 160ற்கும் மேற்பட்டோர் சாவு : அவசரகால நிலை பிரகடனம்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 இற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப் பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹோலுக்குள், துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பணயக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 115 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரிஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மற்றொரு தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும்இ பிரான்ஸ் - ஜேர்மனி இடையேயான உதைபந்தாட்டப் போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரிஸ் நகரின் மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்ததையடுத்து அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்திய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே பிரான்ஸில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, “அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான முயற்சி” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், இன்றிரவு பாரிசில் நடந்த சம்பவங்கள் தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், பிரெஞ்சு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திப்போமென்றும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதல் பாரிஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று கிழக்கு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் பாரிசின் சார்லே ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஐ.எஸ்.தீவிரவாதிகளின் இலக்காக பாரிஸ் ஆனதும், அதேநேரம் பல்வேறு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
