சிரியாவிலிருந்தும் இராக்கிலிருந்தும் புதிதாக வந்துள்ள குடியேறிகளுக்கு ஜெர்மனியில் வைத்தே பயங்கரவாத சித்தாந்தம் புகட்டப்படலாம் என்ற கவலை தனக்கு இருப்பதாக ஜெர்மனியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான தலைமை அதிகாரி தெரிவிரித்துள்ளார்.
129 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையில், பிபிசிக்கு பேட்டி அளித்த ஹன்ஸ் யர்க் மாசென், ஜெர்மனியின் இஸ்லாமியவாதிகள் நாட்டுக்குள்ளிருந்தே இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்க முயன்ற பல சம்பவங்கள் பற்றி தான் கேள்விப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
ஜெர்மனிக்கு இந்த ஆண்டில் மட்டுமே லட்சக்கணக்கான குடியேறிகள் வந்துள்ள நிலையில், குடியேறிகளின் பின்னணியை அறிந்துகொள்ளவும், அவர்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவுமான நடைமுறை தேவை என்று மாசென் கூறினார்.
ஜெர்மனிக்குள் வந்த குடியேறிகள் எவரும் தாக்குதலொன்று திட்டமிடுகிறார்கள் என்பதற்கு வலுவான தடயம் எதுவும் இதுவரை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இராக்கிலிருந்தும் சிரியாவிலிருந்தும் வரக்கூடிய அகதிகள், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அவர்களது நாட்டில் பெற்றிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
