புனர்வாழ்வளிக்க அரசு இணக்கம் : தமிழ் அரசியல் கைதிகளின் பதில் இன்று
நீதிமன்றத்தில் வழக்கு உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமது முடிவை இன்றைய தினம் அறிவிப்போமென 9ஆவது நாளாகவும் நேற்று சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்கல் என்ற கோரிக்கையை அரசு சாதகமாகப் பரிசீலித்து அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், பயங்கரவாதத் தடுப்பு - குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட அரசின் தீர்மானத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார உள்ளிட்டோர் நேற்று மாலை மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளிடம் தெரிவித்தனர்.
"புனர்வாழ்வளிப்பது குறித்து தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்த விருப்புக்களை கருத்தில்கொண்டு நீதிதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள 85 கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய புனர்வாழ்வுக்கான முதற்கட்ட குழுவினர் எதிர்வரும் 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படுவார்கள். அதேவேளை, பிணை வழங்கும் பிரிவில் உள்ள 62 கைதிகளில் (நேற்று) வரைக்கும் 39 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 23 பேரும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள். அதேவேளை, நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்" என்று மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளிடம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்இ எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமாரஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், விடுதலை கோரி 9ஆவது நாளாகவும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது முடிவை இன்றைய தினம் அறிவிப்பதாக அவர்களிடம் கூறினர். முன்னதாக நல்லாட்சி அரசு தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டுமெனக் கோரி கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நாட்டில் உள்ள14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்திற்கு நிரந்தத் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அறிவித்திருந்தபோதும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்காத நிலையில் மீண்டும் இடைநிறுத்தியிருந்த தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் கைதிகள் ஆரம்பித்திருந்தனர். நேற்று 9ஆவது நாளாகவும் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், ஆகக்குறைந்தது தமக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பான்மையானோர் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் விடுத்திருந்த கோரிக்கை நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போதே நீதிமன்றத்தில் வழக்கு உள்ள 85 கைதிகளுக்குப் புனர்வாழ்வு வழங்க அரசு இணங்கியது.
